பெரம்பலூர் மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை, மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் இன்று (20.05.2016) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளான மே மாதம் 21 ஆம் நாள் ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுப்பார்கள்.
நாளை 21.5.2016 சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று (20.5.2016) கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் “அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என்றும், எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்” என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாரிமுத்து(பொது), கீதா(தேர்தல்), மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் தேவிகாராணி, அலுவலக மேலாளர் முத்தையன், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) செல்வராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.