வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடஉள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டசபை தொகுதிகளின் மின்னனுவாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளளன.
இவையனைத்தும் வருகின்ற மே 19-ம் (நாளை) தேதி எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணி 19.05.16 அன்று காலை 08.00 மணிக்கு துவங்கப்பட உள்ளது.
முதலில் அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது.
காலை 8.30 மணியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 17 சுற்றுகளாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 16 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது. மிண்ணனு வாக்குபதிவுகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 மேஜைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர். கண்கானிப்பு உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.
இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும்.
இப்பயிற்சியில் வாக்கு எண்ணிக்கை அன்று அலுவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், எவ்வாறு வாக்கு எண்ணிக்கையை கையாள வேண்டும் என்பது குறித்தும் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் எடுத்துக்கூறினார்.
இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் செலவின பார்வையாளர் பிஜூதாமஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாரிமுத்து (பொது), கீதா(தேர்தல்), பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ரா.பேபி, தனித் துணைஆட்சியர் (சிறப்பத் திட்ட அமலாக்கம்) சிவபிரியா, வட்டாட்சியர்கள் மற்றும் சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.