Government order on release of life prisoners disappointing Chief Minister Stalin should reconsider: TMMK Leader Jawahirullah demand!

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது. கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும், என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்து கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் மொத்த சமூகத்திற்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விரக்தியையும் அளித்துள்ளது.

நவம்பர் 15, 2021 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஏழு தமிழர்களின் விடுதலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

நடைபெற்ற குற்றத்திற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுகின்றனர். இப்படி தண்டனை பெற்றவர்களை அவர்கள் சார்ந்த மதங்களுடன் தொடர்புப்படுத்தி வகைப்படுத்துவதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வகுப்புவாத/மத மோதல்கள் எனக் காரணம் கற்பித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு முன் விடுதலையை மறுத்திருப்பது பெரும் வேதனையை அளித்துள்ளது. மேலும் நீண்ட காலம் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் யாரும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசமைப்பு சட்டத்தின் விதி 161 மாநில அரசுக்கு முன் விடுதலைக்கு நிபந்தனையற்ற உரிமையை அளித்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி உடனடியாக தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன் விடுதலை செய்ய புதிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட தமிழக முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2௦ ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாசம் அனுபவித்து முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றுள்ள நிலையில் விடுதலைச் செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!