Perambalur: Collector orders water tanks to be cleaned once every 15 days!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ந.மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொது சுகாதாரத் துறையின் பேரிடர் கால முன்னேற்பாடுகள், தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், புகையிலை பயன்பாட்டை தடைசெய்தல், அயோடின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்காலங்களில் ஏற்படும் நோயான டெங்கு காய்ச்சல், நீரினால் பரவும் நோய் மற்றும் இன்புளுயன்சா  நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி விட்டதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் உறுதி செய்திட வேண்டும். காய்ச்சல் ஏதும் பரவாமல் தடுக்க தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சமுதாய கூடங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்களில் கொசு உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வரும் அனைத்து வெளி நோயாளிகளுக்கும் சித்தா மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கிட வேண்டும். குளோரினேஷன்  செய்யப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் மஞ்சள் நிறத்தில்  ”No Tobacco Zone”  என எழுதப்படுவதோடு, அயோடின் குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கடைகளிலும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகின்றதா என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, குடும்ப நலம் துணை இயக்குநர் ஜெயந்தி, காசநோய் துணை இயக்குநர் நெடுஞ்செழியன், தொழுநோய் துணை இயக்குநர் சாந்தி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!