Perambalur: Communist Party demands action against Collector Mrinalini for insulting public figures and social activists!



பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி, அலுவல் தொடர்பாக தன்னை சந்திக்க வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை காக்க அவமானப்படுத்துவதால் அவர் மீது தேர்தல் ஆணையமும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 சம்மந்தமான மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை சம்மந்தமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.கருணாகரன், மாவட்ட குழு உறுப்பினர் இரா.எட்வின் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் / கலெக்டருமான ந.மிருணாளினியிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். அப்போது மனுவை பெற்றுக் கொள்ளாமல், நீண்ட நேரம் காத்திருக்க வைத்து பிறகு வந்த பிரமுகர்களை சந்தித்து பேசாமல், தேர்தல் தாசில்தாரிடம் மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி உள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட குழு கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையமும் , தமிழ்நாடு அரசும் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுக்க சென்ற மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) நடத்த உள்ள S.I.R. சம்பந்தமான கூட்டத்தில் எதிர் கட்சி என்ற முறையில் எங்கள் கட்சியின் சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். S.I.R. குறித்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து விட்டு, பின்னர் தற்பொழுது இந்த முடிவை அமல்படுத்த அரசியல் கட்சிகளை நிர்பந்தப்படுத்துகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தொகுதி மறுசீரமைப்பு, மாநிலங்கள்/ மாவட்டங்கள் பிரிப்பு போன்ற அசாதாரணமான சூழ்நிலை எதுவும் தற்போது இல்லை. தேசிய அளவில், SIR ஐ செய்வதற்கு போதிய அவகாசமும், முன்னறிவிப்பும், கலந்தாலோசிப்பும், தேவை. அது இல்லாமல் அதிரடியாக செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.
ஏற்கனவே S.I.R. அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பீகாரில் ஏற்பட்ட பிரச்சனை நம் அனைவருக்கும் தெரியும். இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எஸ் ஐ ஆர் ஐ அமல்படுத்த தேவையில்லை.

தேர்தல் ஆணையம் சுருக்க முறை திருத்தத்தின் மூலம் (Summary Revision) வாக்காளர் சரிபார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் செய்கிற முறையில், அதையே இந்த முறையும் பின்பற்றலாம். பருவ மழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை 30 நாட்களுக்குள் 6 கோடி வாக்காளர்களை எஸ் ஐ ஆர் எந்த முறையில் படிவம் பெற்று வாக்காளர் சேர்ப்பது என்ற முயற்சி நடைமுறை சாத்தியமற்ற விஷயம். இது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கூறுகிறோம்.

தேர்தல் ஆணையம் மேலிருந்து உத்தரவுகளைப் பெற்று தன்னிச்சையாக அதன் முடிவுகளை அமல்படுத்துகிற இந்த சூழலில், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற முறையிலும் இங்கே இருக்கக்கூடிய அனைத்து கட்சி அபிப்பிராயத்தின் அடிப்படையிலும், நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை மறுத்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம், என அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ் கொடுத்துள்ள மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!