Perambalur: Employees attacked a person who went to the Collector’s office to request compensation!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த பெரம்பலூர் சங்குபேட்டை, அழகிரி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (58), என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பணியின் போது உயிரிழந்த நிலையில், அவரது மனைவி பிரேமா, இளைய மகள் பாரதி மற்றும் மகன் மணிகண்டன் உள்ளிட்ட குடும்பத்தார் கருணை அடிப்படையில் வேலையும், இழப்பீட்டு தொகை கேட்டும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
இதற்கிடையே இளங்கோவனின் மூத்த மகள் பொன்மதி(32)யும் இழப்பீட்டு தொகையை தன்னிடம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இளங்கோவனின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்ட சக ஊழியர்கள் பொன்மதிடம் மேற்கொண்ட சமரச பேச்சு வார்த்தையில், வீட்டுமனை ஒன்று எழுதி வாங்கிக் கொண்ட பொன்மதி வழக்கை வாபஸ் பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில் 3 ஆண்டுகளாகியும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறாத பிரேமா நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்திற்கு அவரது மகன் மணிகண்டனுடன் இழப்பீட்டு தொகை கேட்டு சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் அவருக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கிய அதிகாரிகள் அதனை பிழை இல்லாமல் எவ்வாறு பூர்த்தி செய்வது என தெளிவுபடுத்தாமல், நீங்களே பூர்த்தி செய்து எடுத்து வாருங்கள் என அவர்களை அலட்சியப்படுத்தியதோடு, விண்ணப்ப படிவத்தில் ஒட்ட வேண்டிய புகைப்படத்தின் அளவு கூட உனக்கு தெரியாதா? ஏன் இங்கு வந்து எங்க உசுர வாங்குறீங்க? என மனம் நோகும் படி தரக்குறைவான வார்த்தைகளில் பிரேமாவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
தன் கண் முன்னே தாய் அவமானப்படுவதை அறிந்த மணிகண்டன் உங்களோடு தானே எங்க அப்பா வேலை செஞ்சார்? எங்களுக்கு உதவி செஞ்சா குறைந்து போவீர்களா? படித்துவிட்டு தானே நீங்கள் வேலைக்கு வந்தீர்கள்? ஏன் இது போன்று எங்களை ஓறுமையில் பேசுகிறீர்கள் என பாலு மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் என்பவர் கம்ப்யூட்டர் டேபிளில் இருந்து எழுந்து ஓடி வந்து மணிகண்டனை கொடூரமாக தாக்கி சட்டையை கிழித்து அரை நிர்வாணப்படுத்தி அவமதித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நிலைகுலைந்த மணிகண்டன் அடி தாங்க முடியாமல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என தலை தெரிக்க கூச்சலிட்டவாறு கலெக்டர் அறையை நோக்கி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு தலைமை காவலர் ஒருவர் மணிகண்டனின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி, போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் வா என கூப்பிட, நான் எதுவும் செய்யல சார்! அவர்கள் தான் என்னை அடித்தார்கள்! அத்தனை டிபார்ட்மெண்ட் ஆளுங்களும் பாத்தாங்க நீங்க வேணா கேட்டு பாருங்க! எங்க அப்பா சாவுக்கு இழப்பீடு கேட்டு இங்க வந்தது தப்பா சார்? என்ன சார் கவர்மெண்ட் இது? ஆபீசுக்கு வந்தா அடிப்பாங்களா? என கண்ணீர் மல்க காலில் விழுந்து கதறினார்.
இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி சுரேஷ்குமார் தாக்குதலுக்கு உள்ளான மணிகண்டனையும், அவரது தாய் பிரேமைவையும் அழைத்து பேசி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பணியின் போது உயிரிழந்த தந்தையின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு சென்ற இளைஞரை அவரது தாயுடன், மணி கணக்கில் காத்திருக்க வைத்ததோடு, இழப்பீடு தொகை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என எந்த விவரத்தையும் தெரிவிக்காமல், அலட்சியமாக பதில் அளித்து, தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இழப்பீடு கேட்டு ஆட்சியர் அலுவலகம் சென்ற இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உரிய விசாரணை மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!











kaalaimalar2@gmail.com |
9003770497