Perambalur: Palm oil saplings available at subsidized prices; Collector informs!

  இந்தியாவில் பாமாயில் அதிக அளவு பயன்படுத்தி வரும் நிலையில், பெருமளவிலான பாமாயில் தென்கிழக்கு  ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டும், சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்திடவும், நம் நாட்டிலே உற்பத்தி செய்து தன்னிறைவு அடையும் பொருட்டு தோட்டக்கலை துறை தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டம் மூலம் எண்ணெய் பனை சாகுபடி யை ஊக்குவித்து  வருகிறது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் சுமார் 66 எக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் பனைத்திட்டம் – 2025-26 திட்ட செயலாக்கத்திற்கு பொருள் இலக்காக 200 எக்டர் மற்றும் நிதி இலக்காக ரூ.58.00 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் கோத்ரேஜ் நிறுவனம் மூலம் வழங்கப்படஉள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் (ரூ.29000/எக்டேர்) எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுவதுடன் ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அதாவது இரண்டாம், மூன்றாம்  மற்றும் நான்காம் ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக எக்டேர் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5250/- வழங்கப்பட உள்ளது. விரும்பும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற  தங்களது  நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!