Perambalur: A resolution passed in the Nattarmangalam Gram Sabha to inspect stone quarries and crushers!

பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலத்தில் உள்ள கல்குவாரியில் மான் விழுந்து உயிரிழந்தது. இதற்கு தடுப்பு வேலி அமைக்காததே காரணம் என்றும், இதையடுத்து செட்டிகுளம் பகுதியில் கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார். இதையடுத்து விதிமுறையை மீறி செய்லபடும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் மிருணாளினி உறுதி அளித்தார்.
இந்நிலையில் இன்று நடந்த கிராம சபைக் கூட்டம் விஏஓ அலுவலகம் முன்பு, ஊராட்சி செயலர் கவுதமன் தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பற்றாளருமான மாணிக்கம், விஏஓ ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. அப்போது, கிராம மக்கள் சார்பில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் உள்ள வெள்ளிமலையில் குத்தகை உரிமம் பெற்ற கல்குவாரியும், காலாவதியான கல்குவாரியும், தற்போது செயல்பட்டு வரும் கல்குவாரியும் முறையாக செயல்படுகிறதா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கல்குவாரிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாட்டார்மங்கலம், கூத்தனூர் கிராம மக்கள் முன்னிலையில் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், வெள்ளிமலை பகுதியை சுற்றியுள்ள கிரசர்கள் முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து, அதை பொதுமக்களுக்கு வீடியோ மூலம் காட்சிப்படுத்த வேண்டும். குத்தகை உரிமம் முடிந்த கல்குவாரிகளில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க தரமான கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497