Perambalur: Thirukkural Muttothal competition; Students can apply: Collector’s information!

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/-பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே, இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே பெறப்படும் என்பதால் விண்ணப்பத்தாரர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளம் வாயிலாக (https://tamilvalarchithurai.tn.gov.in) விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ (adtamildept@gmail.com) 31.10.2025 ஆம் நாளுக்குள் அனுப்பிவைத்தல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9043187510 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!