Perambalur: Unemployed people can apply for scholarships; Collector informs!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்த வரையில் 10ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.750 வீதமும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதமும் வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04328-296352 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இதர மனுதாரர்களை பொறுத்தவரையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 வீதமும், 12ம் வகுப்பு தகுதிக்கு மாதம் ரூ.400 வீதமும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும், அரசின் இதர திட்டங்களின் கீழ் பணப்பயன் பெறும் பயனாளிகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் நவம்பர்-28ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை 28.11.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.











kaalaimalar2@gmail.com |
9003770497