Perambalur: World Cotton Day; Training for farmers; Inaugurated by the Collector!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு, பருத்தி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சியை கலெக்டர் ந.மிருணாளினி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பருத்தி விளையும் மாவட்டமாக இருந்தது. தற்போது பருத்தி சாகுபடி செய்த பல விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு சென்று விட்டதாக வேளாண்மைத்துறையினர் தெரிவிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பொருத்தவரை இந்த ஆண்டு 5,068 ஹெக்டரில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு வி.பி.டி 1, மற்றும் வி.பி.டி 2 என்ற இரண்டு பருத்தி ரகங்கள் வெளியிடப்பட்டது. வி.பி.டி 1 ரகத்தின் மகசூல் திறன் 1,986 கிலோ/ஹெக்டர் ஆகும். தமிழ்நாட்டின் மானாவாரி, குளிர்கால பாசனம் மற்றும் நெல் தரிசு நிலங்களுக்கு பருத்தி ரகம் வி.பி.டி 2 வெளியிடப்பட்டது. இந்த ரகம் அதிக அடர்த்தி நடவு முறையின் கீழ் மகசூல் திறன் 2,132 கிலோ/ஹெக்டர் ஆகும். இது இயந்திர அறுவடைக்கு ஏற்ற கச்சிதமான ரகமாகும். இதனால் 1 ஏக்கர் பருத்தியை 45 நிமிடங்களில் அறுவடை செய்யலாம். இந்த விதைகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செ.சோமசுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர் செ.பாபு, தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் க. இறைவன் அருட்கனி அய்யநாதன், ஸ்பீக் & கிரீன் ஸ்டார் உர நிறுவன (லிமிடெட்) விழுப்புரம் மண்டல மேலாளர் ராஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர் கி. பாரதி குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, துணை இயக்குநர் (வேளாண்மை பயிற்சியாளர்) பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.