பெரம்பலூரில் உள்ள துறையூர் சாலையில் புளியங்குளம் கிழக்கு பகுதியில் உள்ள பழைய நகராட்சி அலுவலத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஆதார் கார்டு புதிதாக எடுப்பதற்கான கம்ப்யூட்டர் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 2 கம்ப்யூட்டர்கள் இருந்தன. அவற்றில் 1 கம்ப்யூட்டர் இலங்கை அகதிகள் முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டது.
இங்கு தற்போது 1 கம்ப்யூட்டர் மட்டும் கொண்டு, கடந்த 5 நாட்களாக தினமும் குறைவான எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு ஆதார் கார்டுக்காக போட்டோ, கைவிரல் ரேகை, கண் இமை மற்றும் முகவரி உள்ளிட்ட இதர விபரங்கள் தகவல் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தினமும் காலையில் வரும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் கார்டுக்கான புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் பலர் தங்களுக்கு ஆதார் கார்டுக்கான ஃபோட்டோ எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
இதனால் முதியவர்கள் பலர் 4 அல்லது 5 முறை அலையவிடப்படுகின்றனர். நேற்று காலை வழக்கம்போல ஆதார் கார்டு ஃபோட்டோ எடுக்கும் மையத்துக்கு பெண்களும், முதியவர்களும் அதிகாலை முதலே காத்திருந்தனர். ஆனால் குறைந்த நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது.
மற்றவர்களை நாளை வருமாறு கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆதார் கார்டு ஃபோட்டோ எடுக்கும் மையத்தை முற்றுகையிட்டதுடன், துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இத்தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினர். பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் கார்டு மையத்துக்கு மொத்தம் 3 கம்ப்யூட்டர் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.