மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பியது.
இதையடுத்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இந்த 2 அணைகளில் இருந்தும் 1லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கபினி அணையில் இருந்து 14 ஆயிரத்து 583 கன அடி தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 47 ஆயிரத்து 816 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் மொத்தம் 62 ஆயிரத்து 399 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் சீறிப்பாய்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி மேட்டூர் அணை நிரம்பியது. 2014-ம் ஆண்டு நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதன்பிறகு நீர்மட்டம் 100 அடியை எட்டவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகளில் 39-வது முறையாக இந்த ஆண்டுதான் அணை நிரம்பியுள்ளது. அணை நிரம்பியதை அடுத்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 16 கண் பாலம் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை காண மேட்டூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.