குன்னம் அருகே கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 1 லட்சத்து நான்கு ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (50) . வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக லட்சக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் துணை வட்டாச்சியரும் தேர்தல் பறக்கும் படை அலுவலருமான சத்தியமூர்த்தி தலைமையில், பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் ராம்லு, எஸ்.ஐ.,ஜான் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படைபோலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் கல்லை கிராமத்திலிருந்து சாந்தநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் முனியப்பர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த செல்வராஜை பிடித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1 லட்சத்து நான்கு ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் வட்டாச்சியர் ஷாஜகானிடம் ஒப்படைத்தனர்.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் வைத்திருந்த செல்வராஜ் குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.