பெரம்பலூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் டி.செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்மணி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் பொன்.ஆனந்தராசு அஞ்சலி நிறைவேற்றினார்.
அரசு ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் கி.ஆளவந்தார் துவக்க உரையாற்றினார். பு.பால்சாமி வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத்தலைவர் எ.பெரியசாமி சிறப்புரையாற்றினார். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப நல பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ 3.500 வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 3 லட்சம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களின் கல்வி அடிப்படையில் பணி வழங்க வேண்டும், அரசாணை என் 125 ஐ பயன்படுத்தி சமையல் உதவியாளர்களை சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடம் கோரி உள்ள ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கிட வேண்டும், திருப்பூரில் வரும் ஜனவரி மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். பெரம்பலூர் நகரில் விரிவாக்கம் செய்த பகுதிகளுக்கு மின்சாரம் சாலை வசதி மற்றும் காவேரி கூட்டு குடிநீர் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் டி.செல்லப்பிள்ளை, செயலாளர் டி.எஸ்.பெரியசாமி பொருளாளர் பி.பால்சாமி, துணைத்தலைவர்களாக பொன்.ஆனந்தராசு, எம்.வள்ளி, டி.அருள்மொழியும் இணைச் செயலர்களாக எஸ்.காந்தி, டி.இளங்கோவன், ஆர்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.