பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்துவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் பெத்லஹேம் ஜெருசலேம் நாசரேத், ஜோர்டான் நதி, கலிலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் மார்ச் 2016 முதல் ஜுன் 2016 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, (5வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் (நேரில் வரவேண்டியதில்லை).
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும். 01.01.2016 தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளுவதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது. வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்ளுவதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்;படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ.20ஆயிரம் நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபரை மேற்படி நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறிஸ்தவ மக்கள் தொகையின் அடிப்படையில் கணிணி மூலம் குலுக்கல் முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே இப்புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இப்புனித பயணத்திற்கான காலம் மற்றும் பயண நிரல் ஜெருசலேம் புனித பயணக்குழுவால் முடிவு செய்யப்படும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனித பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விவரம் தெரிவிக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறத்தவ மக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.