மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங் களை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கைகளை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர் திறப்பு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. காவிரி கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது கூடுதல் நீர் திறப்பால் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அணை நிரம்பும் பட்சத்தில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், மேட்டூர் அணைப் பூங்கா, செக்கானூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், பவானி கூடுதுறை ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் காவிரியில் புனித நீராடுவர். எனவே மக்களின் பாதுகாப்பு கருதி எந்தெந்த இடங்களில் மக்கள் ஆற்றில் இறங்கக் கூடாது என எச்சரிக்கும் பலகைகள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குளிப்பதற்கு ஏதுவான இடத்தைக் கண்டறிந்து, அங்கு மட்டுமே மக்களை குளிக்க அனுமதிக்க வேண்டும். ஆழமான இடங்களுக்கு மக்கள் சென்று விடாத வண்ணம் தடுப்புகள் அமைப்பதுடன், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புனித நீராடும் பகுதிகளில் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் முன் வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நடந்தாலே அசம்பாவிதங்களில் இருந்து தப்பலாம் என்பதே பொதுவான கருத்து.இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி கல்வடங்கம், பூலாம்பட்டி பகுதியில் சுற்றுலாபயணிகள், மற்றும் இளைஞர்கள் தடையை மீறி ஆற்றில் குளித்து வருகின்றனர். பூலாம்பட்டி படகு இல்லத்தில் தடையை மீறி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.