Mohanur new Taluk: G.O issue: Tamil Nadu Chief Minister will inaugurate tomorrow.
மோகனூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டு, அகற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருவாய் வட்டத்தை காணொலி காட்சி மூலம் வரும் வியாழக்கிழமை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய 7 வருவாய் வட்டங்கள் உள்ளன. இந்நிலையில் நாமக்கல் வருவாய் வட்டத்தில் உள்ள மோகனூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என மோகனூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை குறித்து நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலேயே பேரவையில் வலியுறுத்தினர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்எல்ஏ பாஸ்கர் கோரிக்கையை ஏற்று மோகனூரை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனைதொடர்ந்து மோகனூர் தனி வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் வியாழக்கிழமை முதல் மோகனூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படவுள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
புதிய வருவாய் வட்டம் உருவாக காரணமாக இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட உள்ள இடத்தை நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, சார் ஆட்சியர் கிராந்திகுமார்பதி, எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
மோகனூர் வருவாய் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் விவரம்:
மோகனூர் வருவாய் வட்டத்தில் வளையப்பட்டி, மோகனூர், மேட்டுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய 4 குறு வட்டங்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 31 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வளையப்பட்டி குறுவட்டத்தில் வளையப்பட்டி குரூப், என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், பரளி, தோளூர், அணியாபுரம், லத்துவாடி ஆகிய 8 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மோகனூர் குறுவட்டத்தில், அரசநத்தம், ஆரியூர், பேட்டப்பாளையம், மோகனூர், ராசிபாளையம், ஒருவந்தூர், குமரிபாளையம் ஆகிய 7 வருவாய் கிராமங்களும், மேட்டுப்பட்டி குறுவட்டத்தில் எம்.மேட்டுப்பட்டி, செவிந்திப்பட்டி, வடவத்தூர், அக்ரஹார வாழவந்தி குரூப், திப்ரமாதேவி ஆகிய 5 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பாலப்பட்டி குறுவட்டத்தில் நஞ்சை இடையார், இடும்பன்குளம், புஞ்சை இடையார் கீழ்முகம், காளிபளையம், செங்கப்பள்ளி, கொமராபாளையம், சர்க்கார் வாழவந்தி, குட்லாம்பாறை, மாடகாசம்பட்டி, பெரமாண்டாம்பாளையம், ச.மணப்பள்ளி் ஆகிய 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
7 ஆண்டுகளில் 4 புதிய வருவாய் வட்டங்கள்:
2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்த காலத்தில் இருந்து 7 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 4 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டள்ளது.
இதில் கொல்லிமலை, சேந்தமங்கலம், குமாரபாளையம் வருவாய் வட்டங்கள் 2011-2016 வரையிலான காலத்தில் அமைக்கப்படவை. இப்போது புதிதாக மோகனூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கொல்லிமலை, சேந்தமங்கலம் வருவாய் வட்டங்கள் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வருவாய் வட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்டன.
திருச்செங்கோடு வருவாய் வட்டத்தை பிரித்து குமாரபாளையம் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது.
மோகனூர் வருவாய் வட்டம் நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் பரமத்திவேலூர் ஆகிய வருவாய் வட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரித்து உருவாக்கப்பட்டுள்ளது.