Association complained to the collector to demand compensation for the family of the deceased farmer
இறந்து போன கறிகோழிவளர்ப்பு விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி அச்சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கறிகோழிவளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் பெரம்பலூர் ஆட்சியரிடம் அளித்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :
நாங்கள் தமிழகஅரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் முறையாகத் தேர்வு செய்யப் பட்டு, வங்கி கடனை பெற்று கறிகோழி வளர்ப்பு தொழிலை நடத்தி வருகின்றோம். ஆனால் பலமுறை எங்களது பிரச்னைகளைத் தங்களிடமும், கால்நடைத்துறை உதவிஇயக்குநர், மண்டல இணைஇயக்குநர், கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்துச்சொல்லியும், அந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, எங்களது வங்கிக்கடனை கட்டுவதற்கு வழிகாட்ட எந்த அதிகாரிகளும் முன் வரவில்லை.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி பூலாம்பாடியைச்சேர்ந்த கோழிப்பண்ணை விவசாயி செல்வராஜ் இறந்து விட்டார். அவருக்கு கடந்த ஓராண்டாக கம்பெனி நிர்வாகம் கோழிக் குஞ்சுகளை வழங்கவில்லை. கடந்த 4 மாதத்திற்கு முன்பு வேறு ஒரு கம்பெனியில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு, அதற்குண்டான வளர்ப்புத் தொகையையும், 3 மாதங்களாக இன்னமும் வழங்கப் படவில்லை.
வங்கியில் பெற்ற கோழிப்பண்ணை கடனை செலுத்த வேண்டுமென ஐஓபி வங்கிப் பணியாளர்கள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுத்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் குன்றி இறந்துள்ளார். எனவே மனஅழுத்தத்தால் உயிரிழந்த கறிகோழி வளர்ப்பு விவசாயி குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கறிகோழிவளர்ப்பு விவசாயிகள் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்க அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.