பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு அலுவலர்கள் ஏற்றனர்.
14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி அறிவு பெற, சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டும், அவ்வாறு வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
ஆண்டுதோறும் சூன் மாதம் 12ஆம் நாள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சூன் 12 ம் தேதி அரசுவிடுமுறை தினம் என்பதால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிடவும், சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
13.6.2016 அன்று குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பாலக்கரை பகுதியில் சுமார; 500 பேர் பங்கேற்கும் மனிதசங்கிலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.