Christmas festivities in Perambalur: Special prayers in churchesபெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பெரம்பலூர் நகரம், பாளையம், எசனை, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, தொண்டைமாந்துறை, கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, நூத்தப்பூர், அயன்பேரையூர், வடக்கலூர், திருவாளந்துறை, பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் நிர்வாகங்கள் சார்பில் அலங்கார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இரவு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டன. அலங்கார வாகனங்கள் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தேவாலயங்களை சென்றடைந்தன. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தேர் பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்துமஸ் அறுசுவை விருந்தும் பல தேவாலயங்களில் வழங்கப்பட்டது