பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் காட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.


நேற்று திருவிழாவின் ஒரு பகுதியாக கிடா வெட்டு, மாவிளக்கு பூஜை மற்றும் அலகு குத்துதல் நடந்தது. பின்னர், இரவு வேளையில் மேடை இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்து வந்தது. தேர் நிலையை அடையும் வேளையில் முன் விரோதம் காரணமாக மீண்டும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.
ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் தெருவிற்குள் அத்து மீறி தாக்க முயன்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டவுடன் ஒரு தரப்பு பின்வாங்கியது. இதனால் ஜாதிக் கலவரம் உருவாகும் அபாயம் ஏற்பட்டதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல் போலீசாரை அனுப்ப கேட்டுக் கொண்டனர்.
அதற்குள் அவ்வழியாக வந்த ஒரு தரப்பினருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை மற்றொரு தரப்பினர் வழிமறித்து தாக்கினர். ஆட்டோ கண்ணாடிகள் உடைந்து சேதமானது. மேலும், ஆட்டோ புரட்டி விடப்பட்டது. மோதலில் பலத்த காயமடைந்த ஒரு தரப்பை சேர்ந்த 3 பேரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினரால் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸ் மறிப்பு :
மற்றொரு தரப்பினர் ஆம்புலன்சை வழிமறித்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். மேலும், முயல்வேட்டை திருவிழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சேதப்படுத்தினர்.
போலீசார் வந்த உடன் சாலை மறியல் கைவிடப்பட்டது. எசனை கிராமம் பதட்டமானது.
நிலைமை கட்டுக்குள் கொண்டு வர எஸ்.பி திஷா மிட்டல், ஏ.டி.எஸ்.பி, ஞான.சிவக்குமார், டி.எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் இரு தரப்பு குடியிருப்பு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனர்.
எசனை கிராமம் இயல்பு நிலைக்கு திரும்ப வருவாய் துறையினர் உதவியுடன் இரவு முழுக்க ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497