Congress’s insidious double role in the release of seven Tamils!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் விடுத்துள்ள கண்டனம்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமை நஞ்சு கக்கியிருக்கிறது. காங்கிரசுக் கட்சியின் அனைந்திந்தியத் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்திப் சுரேஜ்வாலா நேற்று தில்லியில் வெளியிட்ட அறிக்கை, இன்று (11.09.2018) அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது.

“பா.ச.க.வின் கூட்டாளிக் கட்சியான அ.இ.அ.தி.மு.க. அரசும், பா.ச.க. அரசு அமர்த்திய தமிழ்நாடு ஆளுநரும் சேர்ந்து கொண்டு முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு விடுதலை வழங்கப் போகிறார்களா? பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதி -களுக்கும் பா.ச.க. அரசு துணை போகிறதா?” என்று கேள்வி எழுப்பி, ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இராசீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களும், காங்கிரசுக் கட்சித் தலைவர்களுமான சோனியா காந்தியும், இராகுல் காந்தியும், இராகுல் காந்தி தங்கை பிரியங்கா காந்தியும், “இவர்களை மன்னித்துவிட்டோம்” என்று கூறியிருப்பது குறித்து, செய்தியாளர்கள் கேட்டபோது, “அது அவர்களது தனிக் கருத்து. பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஒதுக்கி வைக்கும் கடமையிலிருந்து அரசு தவறிவிடக் கூடாது என்பதே காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாடு!” என்று சுரேஜ்வாலா கூறினார்.

காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தியின் கருத்துக்கு மாறாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர், ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக நமது ஏழு தமிழர்களை மன்னித்து விட்டதாகக் கூறிவிட்டு, மறுபுறம் நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு பல கொடிய தடைகளைத் தாண்டி ஏழு தமிழர் விடுதலைக்கான சட்ட வழிப்பட்ட செயல்முறை – அதன் நிறைவு நிலையை அடைந்திருக்கும் சூழலில், அவ்விடுதலையைத் தட்டிப் பறிக்கும் இனப்பகை நோக்கோடு காங்கிரசுக் கட்சி இவ்வாறு கூறுவது நயவஞ்சக இரட்டை வேட நாடகமாகும்!

காங்கிரசுக் கட்சி தனது தமிழினப் பகை நிலையிலிருந்து ஒருபோதும் மாறாது என்பதையே இது உறுதி செய்கிறது!

வழக்கம்போல் பா.ச.க.வின் சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்ற தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து, காய் நகர்த்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழினத்தின் ஒட்டுமொத்த உணர்வுக்கு எதிரான தமிழினப் பகை அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாடு அமைச்சரவைப் பரிந்துரையை எந்தத் தாமதமும் இன்றி ஏற்றுக் கொண்டு – தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

சட்ட நெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கருத்துக்கு இணங்கவும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமது அமைச்சரவை எடுத்த முடிவு – எந்தக் குழுப்பமும் இல்லாமல் உடனடியாக நிறைவேறுவதற்கு ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள், காங்கிரசுக் கட்சி – தமிழினப் பகைக் கட்சி என்பதைப் புரிந்து கொண்டு, ஏழு தமிழர் விடுதலையில் விழிப்போடு செயலாற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!