#பெரம்பலூர் : தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் வட்ட தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் மற்றும் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் . அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :
தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் கடந்த சில காலங்களாக நிர்வாக மேற்பார்வையாளர் தடுக்கப்பட்டு வருவதாகவும்,
வீட்டு வாடகைப்படி முறைகேடாக பிடித்தம் செய்வது கோப்புகள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் முறைகேடு நடக்கிறது என்றும்,
பணப்பயன்களை அனுமதி அளிப்பது, விடுப்பு அனுமதி, மற்றும் ஊழியர்களுக்கு பணி பதிவேடுகள் அனுப்புவது ஆகிய பணிகளில் காலம் தாழ்த்தி திட்டமிட்டு செயல்படுவதாகவும் இதற்கு உதவி நிர்வாக அலுவலரும் உடந்தையாக உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது சம்பந்தமாக பெரம்பலூர் மின்பகிர்மானம் செயற்பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும்,
மின்வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்படாத செயல்களில் தன்னிச்சையாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் உதவி நிர்வாக அலுவலர் ஜெகநாதபிரசாத் ஆகியோரின் தொழிலாளர் விரோத போக்கினால் கோட்டம் முழுவதும் நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் நிர்வாக மேற்பார்வையாளர் மற்றும் உதவி நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், மாரிமுத்து, எஸ்.அகஸ்டின், மின்னல் ஹபீப், ராவணன், இருதயராஜ், கணேசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.