Fisheries Inspector of assistant in the office of a Fishery
பெரம்பலூர் மாவட்ட மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் : பொதுப்பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு மீன் வளத் துறையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பெரம்பலூர் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் நிரப்ப பொதுப்பிரிவினர் (Priority) மட்டும்) தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடிக்கத் தெரிய வேண்டும், மீன்பிடி வலை பின்னவும் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
மீன்வளத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாடு மீன்வளத்துறை சார்நிலைப் பணிக்கான சிறப்பு விதிகளில் விதி 5-ல் குறிப்பிட்டுள்ளவாறு மீன்வள உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவார்கள்.
01.05.2016 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்ச வரம்பு 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு ஊதிய விகிதம் ரூ.4800 – 10,000 தர ஊதியம் ரூ.1400-ஆகும். மீன்வள உதவியாளர்களுக்கு நீர்நிலைகளில் மீன்பிடித்தல், மீன்பண்ணைகளில் மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் பணிகளான நாற்றங்கால் தயாரித்தல் சினை மீன்கள் பராமரித்தல், மீன்களுக்கு உணவிடுதல், தூண்டுதல் முறையில் மீன்கள் இனப்பெருக்க பணிகளை மேற்கொள்ளுதல், இயற்கை நீர்நிலைகளில் மீன்குஞ்சுகளை சேகரித்தல், வலைப்பின்னுதல், ரோந்து பணிகள் மேற்கொள்ளுதல், துறை நீர்நிலைகளில் வளரும் பாசிகளை அகற்றுதல், தேவையின் அடிப்படையில் கடலில் படகில் சென்று, ரோந்து பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேற்காணும், தகுதியுடைய நபர்கள் சான்றொப்பமிட்ட தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படங்கள் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பத்தினை 01.02.2017 முதல் 10.02.2017 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மீன்வளத் துணை இயக்குநர் (மண்டலம்), 17-2, சமது பள்ளித்தெரு, காஜா நகர், திருச்சி-20 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.