Government e-service centers for Rs 25 color voter identity card
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல, பகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இ-சேவை மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது முதற்கட்டமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் ரூ.25- (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மொத்தம் 5 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்களில் பொதுமக்கள் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளைப்பெற்றுக்கொள்ளலாம், என தெரவிக்கப்பட்டுள்ளது.