In Perambalur, a consultative meeting on the Rules of Electoral Conduct with recognized political parties

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2021ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கட பிரியா தலைமையில் நடந்தது,

அரசியல் கட்சியினர் பொது இடங்களில் அமைத்துள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும். அரசு, தனியார் கட்டிடங்கள், சுவர்களில் செய்துள்ள கட்சி விளம்பரங்களை அழித்திட வேண்டும். நகப்புறப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்திட அனுமதி இல்லை. கிராமப்புற பகுதிகளில் தனியார் இடங்களின் உரிமையாளர்களிடம் எழுத்து வடிவில் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று அதன் பின்னர் விளம்பரம் செய்து கொள்ள வேண்டும்.

கட்சி ஊழியர் கூட்டங்கள் நடத்துவதற்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியை பெற வேண்டும். அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் கட்சி அலுவலகங்கள் அமைத்திடக் கூடாது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளி வளாகங்களில் அமைத்தல் கூடாது, கட்சி அலுவலங்கள் அமைப்பதற்கான அனுமதியை இணையதள வாயிலாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பெறலாம். வேட்புமனு தாக்கல், தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டங்கள், வாகனம் மற்றும் ஒலிபெருக்கி அனுமதி போன்றவற்றிற்கு htts:suvidha.eci.gov.in/login என்ற இணையதளம் மூலமாக 48 மணிநேரம் முன்னதாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கூட்டம் நடத்தும் இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே இணைய தளம் மூலம் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெறவேண்டும். இதன்மூலம் காவல் துறை, போக்குவரத்து மற்றும் பொது அமைதியினை சீர்செய்வதற்கு திட்டமிட ஏதுவாக அமைகிறது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளை முன்னரே அறிந்து அதற்கு ஏற்றவாறு பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தினை தேர்வுசெய்திடவேண்டும். இவ்விதிமுறையினை தவறாது பின்பற்றவேண்டும். பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை அப்புறப்படுத்திட காவல்துறையின் உதவியை நாடவேண்டும். பொதுக்கூட்டங்களை நடத்தும் அமைப்பாளர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தல் கூடாது பணம் கொடுத்தோ அல்லது வேறு வகையிலோ வாக்காளர்களை தூண்டிவிடக்கூடாது.

பல்வேறு சாதிகள், சமூகங்கள் அல்லது மத மொழி குழுக்களிடையே வெறுப்பு மற்றும் வேறுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தல் கூடாது. தலைவர்கள் மற்றும் இதர நபர்கள் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி விமர்சனம் செய்தல் கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்துவாராக்கள் அல்லது பிற வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தல், தேர்தல் பற்றி பேசுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் பிரச்சாரம் சம்மந்தப்பட்ட பாடல்களை இசைத்தல் போன்ற செயல்களை செய்தல் கூடாது.

தனி நபர்களின் கட்டிடம் சுற்றுச்சுவர், வாகனங்கள் போன்றவற்றில் சுவரொட்டிகள் ஒட்டவோ, பதாகைகள் வைக்கவோ, தேர்தல் முழக்கங்கள் எழுதவோ, கொடிகளை கட்டவோ, முன் அனுமதியை பெற வேண்டும். பிற அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்களிலோ அல்லது ஊர்வலங்களிலோ இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாது. பிற அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கவரொட்டிகளை நீக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து பூர்வமான முன் அனுமதி பெறாமல் பொது கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.

பேரணி ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்கள் முன்கூட்டியே பேரணி செல்லும் பாதையை முடிவு செய்வதன் மூலம் போக்குவரத்திற்கு இடையூறோ அல்லது தடையோ ஏற்படாவண்ணம் இருக்கும். மேலும் பேரணியானது மிக நீண்டதாக இருப்பின் பேரணிகளை பகுதிகளாக பிரித்து குறிப்பிட்ட இடைவெளி அமைத்து நடத்துவதன் மூலம் சாலைசந்திப்பு மற்றும் முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாவண்ணம் பேரணி அமையும் இத்தகைய ஏற்பாடு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும். காவல் துறையின் அறிவுரையினை முழுமையாக பின்பற்றி பேரணி நடத்திடவேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஒரே வழித்தடம் மற்றும் நாளில் பேரணி சென்றிட உத்தேசிக்கும்போது இதர கட்சிகளுடன் மோதலோ அல்லது போக்குவரத்து சீர்க்குலைவு ஏற்படாவண்ணம் பேரணியினை அமைத்திட திட்டமிடல் வேண்டும். கூட்டத்தின் போது முறையற்ற வாசகங்களை பயன்படுத்துதல் கூடாது. பேரணியின் போது மாற்று கட்சியினரின் உருவபொம்மைகளை எரித்தல் மற்றும் பிறவகையில் அவமதித்தல் கூடாது. ஊர்வலம் செல்லும் நபர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்கள் ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தின்கீPழ் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் வாக்காளர்களை அச்சுறுத்தல், ஆள் மாறாட்டம் செய்திடல் கூடாது. வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரம் முன்னதாக வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் பரப்புரை செய்தல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் கூடாது. தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்லுதல் கூடாது.

தனி மனிதனின் சுதந்திரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு இடையூறு இல்லாதவாறு தேர்தல் பரப்புரை செய்திட வேண்டும். தனிநபரின் கருத்து மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக அவரின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடத்துதல் கூடாது. தனிநபர் இடங்களில் விளம்பரம் மற்றும் தட்டிகளை நில உரிமையாளரின் அனுமதி பெறாமல் அமைத்திடக் கூடாது.இதர கட்சியினர் நடத்தும் கூட்டம் மற்றும் பேரணிகளில் இடையூறு செய்திடல் கூடாது. இதர கட்சியினரின் போஸ்டரை அகற்றுதல் கூடாது என மாவட்ட தேர்தல் அலுலவர் ஃமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!