பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில் மற்றும் பள்ளிகளில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வித்யா ஆரம்பம் என்று அழைக்கப்படும் இந்த தினத்தில், குழந்தைகளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுப்பது வழக்கம். கோவில், மற்றும் பள்ளிகளில் அங்குள்ள ஆசிரியர்களை கொண்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகளின் நாவில் தங்க ஊசியாலும், விரல்களை கொண்டு பச்சரிசியிலும் கோவில் பூசாரிகள் எழுதி, ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மங்களகரமாக இன்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தமிழின் முதல் எழுத்தான அ, ஓம், பிள்ளையார் சுழி உள்ளிட்டவைகளை குழந்தைகள் மஞ்சளைக் கொண்டு அரிசியில் எழுதி முதல் கல்வியை கற்றுக் கொண்டனர்.
நவராத்திரி விழாவை நிறைவு செய்யும் வகையில் விஜயதசமி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நாளில் மேலும் முக்கிய சிறப்பு, பிறந்த மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதன்முறையாக கல்வி தொடங்கும் நாளாகவும் பாரம்பரியமாக நடத்தபட்டு வருகிறது.