In Perambalur in the municipality, mosquito larva production process of preventing smoking initiation medicine blow
பெரம்பலூர் : டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசுவினால் ஏற்படுகிறது. இந்த கொசுவானது தூய நீரில் மட்டுமே இனப்பெருக்கும் செய்யும் தன்மை கொண்டதாகும். ஏடிஸ் கொசுப்புழுக்கள் வீட்டை சுற்றியுள்ள தண்ணீர் தேங்கியுள்ள உரல், டயர், தண்ணீர் தொட்டிகள், வீட்டு தாழ்வாரத்தில் தேங்கியுள்ள மழைநீர், தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சரட்டைகள், குடிநீர் மற்றும் பிற உபயோகத்திற்காக பிடித்து வைக்கும் நீர்த்தொட்டிகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யும்.
இவற்றை அழிக்க பொது சுகாதாரத் துறையின் மூலம் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் பணிபுரியும் உள்ளாட்சி பணியாளர்களையும் கொண்டு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை அகற்றியும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் அபேட் மருந்து தெளித்தும் கொசு ஒழிப்புபணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அபேட் மருந்து வீடுகளுக்கு உள்ள தண்ணீர் உபயோகப்படுத்தும் இடங்கள் மற்றும் தண்ணீர் சேகரிக்கும் இடங்களில் உள்ளாட்சி, பேரூராட்சி, மற்றும் நகராட்சியை சேர்ந்த சுகாதார பணியாளர்களால் தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையான கொசுப்புழு உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், டயர்களை அப்புறப்படுத்தி அழிக்கும் பணிக்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் கூடுதல் பணியாளர்கள் நியமித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த 50 தற்காலிக பணியாளர்களும், நகராட்சியின் சார்பில் 44 தற்காலிக பணியாளர்களும், மேற்பார்வை பணிகளுக்காக 10 சுகாதார ஆய்வாளர்களும் கொசுப்புழு அழுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரகப் பகுதிகளில் கொசுப்புழு அழிக்கும் பணிகளில் வட்டாரத்திற்கு 20 தற்காலிகப் பணியாளர்கள் வீதம் 80 பணியாளர்களும், 25 சுகாதாரா ஆய்வாளர்களும், 4 பேரூராட்சிகளிலும் தலா 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் 40 தற்காலிகபணியாளர்கள் என மாவட்டம் முழுவதும் 214 தற்காலிகப்பணியாளர்களுடன் 35 சுகாதார ஆய்வாளர்கள் கொசுப்புழு அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கொசுப்புழு அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன் அவர்கள் வழங்கும் அறிவுரைகளை முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்ப்படும் போது தாங்களாகவே கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உண்ணாமல் மருத்துவரின் அறிவுரைப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமணைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் போன்ற அறிவுரைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடு அருகில் நகராட்சி பணியாளர்கள் மூலமாக அனைத்து இல்லங்களிலும் நேரடியாகச்சென்று கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து அவ்விடத்திலிருந்து தண்ணீரை அகற்றியும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் அபேட் மருந்து தெளித்தும் கொசு ஒழிப்புபணிகள் நடந்து வருகிறது. மேலும் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மூலமாக துறைமங்கலத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர் ஆர்.சுப்ரமணியன், மாவட்ட கொள்ளை நோய் மருத்துவர் மரு.அரவிந்த், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், வட்டார சுகாதரா மேற்பார்வையாளர்கள் இளங்கோ, கலியமூர்த்தி மற்றும் சுகாதார, துப்புரவு ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.