#jallikattu
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வாகனங்களில் வந்த ஜல்லிக்கட்டு காளைகளை போலீசார் மடக்கி பிடித்தால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில், அன்னமங்கலம், அரசலூர், மலையாளப்பட்டி, கள்ளப்பட்டி, கடம்பூர், பூலாம்பாடி, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், விசுவக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு, நடத்தியும், காளைகளை வளர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவால் ஜல்லிகட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத்தரக்கோரி இன்று 50 மேற்பட்ட காளை வளர்ப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க காளைகளுடன் வாகனங்களில் புறப்பட்டு வந்தனர்.
இதை அறிந்த போலீசார் வாகனங்களில் காளைகளை எடுத்து செல்லக்கூடாது என்றும், காளைகள் மிரண்டால் சிக்கலாகிவிடும் என்றும் தெரித்து பாதிவழியிலேயே எசனை கிராமம் அருகே தடுத்து நிறுத்தினர்.
இதனால் காளை வளர்ப்போருக்கும், போலீசாருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதே போன்று அன்றாடம் அடிமாடுகளுக்கு எடுத்து செல்லப்படும் ஆடு, மாடுகளை தடுக்க போலீசாருக்கு திராணி உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை போலீசார் காளை ஏற்றி வந்த வாகனங்களுடனேயே பாதுகாப்பிற்காக வந்தனர். அங்கு வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நாளை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் கூட்டம் நடத்துவதாக தெரிவித்தன் பேரில் காளைமாடுகளுடன் கலைந்து சென்றனர்.
இந்த ஆண்டு அனுமதி கொடுத்தாலும், கொடுக்கவிட்டாலும், தடையை மீறி வழக்கம் போல் நடைபெறும் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைத்து கிராமங்களில் நடத்தப்போதாகவும், வருவாய் துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தால் கிராமங்கள் தோறும் சட்டப்படியோ அல்லது ஒன்றாக இணைந்து கைதாகவோ தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காளைமாடுகளுடன் படித்த இளைஞர்கள் வருவாய் துறை மற்றும், காவல் துறையினருடன் மல்லுக்கு நின்ற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.