Perambalur: 3 members of the same family committed suicide due to debt problems!
பெரம்பலூர் மாவட்டம், நெய்குப்பை அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60). இவரது மனைவி கலா (53). இவர்களுக்கு பிரியா (30), நித்யா (28), சிவா (26) என்ற 3 பிள்ளைகள் இருந்தனர். பெண் பிள்ளைகளான பிரியா, நித்யா இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவாவிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தாய்மாமன் மகள் அனிதாவுடன் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு அதிக அளவில் கடன் பெற்று திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிவா வேலைக்கு செல்லாமல் இருந்ததால் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனமடைந்த சின்னதுரை, கலா, சிவா ஆகிய மூன்று பேரும் நேற்று வீட்டின் அருகே குத்தைக்கு பார்த்து வந்த வயல்காட்டில் பருத்திக்கு தெளிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிவாவின் திருமணத்திற்கு அதிக அளவில் கடன் வாங்கியதாலும், அதே ஊரைச் சென்ற சேர்ந்த பலரிடம் சிவா வேலை வாங்கி தருவதாக கூறி கடன் பெற்றுள்ளதாகவும், அதனால் கடன் தொல்லை அதிகமாகி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரிய வருகிறது. மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.