Perambalur: AI skills training for school teachers; Collector inaugurates the program!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெறும் ஏ. ஐ கற்றல் திறன் பயிற்சியை கலெக்டர் ஷரண்யா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு இன்று நமது அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளில் வேகமாக முக்கிய இடம் பெற்று வருகிறது. எனவே, நமது ஆசிரியர்களும் மாணவர்களும் ஏ.ஐ பற்றி தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், அதை சரியாகவும், பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். “ஏ.ஐ ஒரு குழந்தையின் சிந்தனைக்கு மாற்றாக இருக்க கூடாது. குழந்தைகள் இன்னும் சிறப்பாக சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும், புதிதாக உருவாக்கவும் ஏ.ஐ உதவ வேண்டும். ஏ.ஐ சம்ரத் மூலம் முதலில் நமது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக மாணவர்களை ஏஐ நிறைந்த எதிர்காலத்திற்குத் தயார் படுத்துகிறோம்.” ஏஐ சம்ரத், சென்ட்ரல் ஸ்கொயர் பவுன்டேசன், மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன், சிறயலிஷ் செயல்படுத்தும் ஏஐ லிட்ரேசி திட்டமாகும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏ.ஐ பற்றிய அறிவு, நம்பிக்கை மற்றும் அதை பொறுப்புடன் பயன்படுத்தும் திறனை வளர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தில். ஆசிரியர்கள் ஏ.ஐ-யின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதுடன், கற்பித்தல், பாடத் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் பிற கல்விப் பணிகளில் எவ்வாறு உதவும் என்பதையும் கற்றுக் கொள்வார்கள். பின்னர், தாங்கள் கற்றுக் கொண்டதை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். குறிப்பாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள், ஏஐ என்றால் என்ன, அது எப்படிசெயல்படுகிறது, நமது அன்றாட வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கற்றுக் கொள்வார்கள். இக்கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் இந்தத் திட்டம் கற்றுக்கொடுக்காது. பொறுப்புடன் பயன்படுத்துவது, இணையப் பாதுகாப்பு, தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
மேலும், ஏஐ தரும் எல்லாத் தகவல்களும் எப்போதும் சரியாக இருக்காது என்பதையும் மாணவர்கள் புரிந்து கொண்டு அப்படியே நம்பாமல், சிந்தித்து, சரிபார்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். ஏஐ குழந்தைகளின் அறிவு, சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் கருவியாக இருக்க வேண்டும்; அவர்களின் சொந்த சிந்தனையை மாற்றும் ஒன்றாக இருக்கக் கூடாது. ஏஐ சம்ரத் போன்ற திட்டங்கள் மூலம், பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, எதிர்கால வாய்ப்புகளுக்கு தயாராக வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட சுமார் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் கற்றுக் கொண்டதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என பேசினார். கல்வித்துறை பணியாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497