Perambalur: Anti-corruption police raid RTO office; ₹40,000 seized!

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய 6 மணி நேர சோதனையில் இடைத்தரர்களிடமிருந்து 39ஆயிரத்து 140 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கும் ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் கையூட்டு பெறுவதாக பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இன்று பகல் 12 மணி அளவில் பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் திடீரென வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள், டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் இடைத்தரகர்கள் மற்றும் டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்களிடமிருந்து 39ஆயிரத்து 140 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இந்த பணம் எப்படி வந்தது எதற்காக யார் கொடுத்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த திடீர் சோதனையால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497