Perambalur: Apply for loan and education loan through TAMCO; Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இக்கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இக்கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் திட்டம் -1ன் மற்றும் திட்டம் -2-ன் படி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் திட்டம்- 1-ல் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000/-மும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-மும் என இருந்து வந்த நிலையில், தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வருமான உயர்வு 01.10.2024 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் , நகர கூட்டுறவு வங்கி/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.