Perambalur: Collector launches fish farming project in lakes by releasing fish fry!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மூங்கில்பாடி பெரிய ஏரியில் மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இந்திய பெருங்கெண்டை மீன் குஞ்சுகளை, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று ஏரியில் விட்டு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையிலும், மீனவர்கள நலன் காத்திடும் வகையிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நடப்பு 2024ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரின் அறிவிப்பின்படி “கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், கிராமப்புற மக்களுக்கு மீன் புரதச்சத்து எளிதில் கிடைத்திடவும் வழிவகை செய்திட ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வாயிலாக மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிட வழிவகுக்கும்.
இத்திட்டதை முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 நீர்நிலைகளில், மொத்தம் 70 ஹெக்டேர் பரப்பளவில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் வீதம் 70 ஹெக்டர்களுக்கு 1.40 லட்சம் மீன் குஞ்சுகள், அரசு மீன் குஞ்சு பண்ணையிலிருந்து பெறப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருப்பு செய்திடப்படும்
மூங்கில்பாடி பெரிய ஏரியில் 6 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை விரலிகள் ஏரியில் விடப்பட்டு மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தினை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் பெ.திவ்யா மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.