Perambalur: Cops nab bike escapee with deer curry and wild boar!
பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் மான் மற்றும் காட்டுப் பன்றியை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மான் கறி மற்றும் காட்டுப்பன்றி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு இதனை வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்,
வேப்பந்தட்டை அருகே உள்ள வடக்கு மாவலிங்கை பகுதியில் கை,களத்தூர் சப் – இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை கண்டதும் நிற்காமல் பைக்கில் வேகமாக தப்பி சென்ற வாலிபரை துரத்திச் சென்று மடக்கி பிடித்தபோது அந்த இருசக்கர வாகனத்தில்
நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு சாக்கு பையில் தோல் உரித்த மான்கறி மற்றும் காட்டுப் பன்றியும் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சேலம்
சவுதாபுரத்தைச் சேர்ந்த தீனதயாளன் மகன் கோபிநாத் என்பதும் வேப்பந்தட்டை அருகே உள்ள வனப்பகுதிகளில் மான் மற்றும் காட்டுப் பன்றிகளை நாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு சுட்டு வேட்டையாடியதும் தெரிய வந்தது.
இதனைத் அடுத்து கோபிநாத்தையும் அவர் வைத்திருந்த மான்கறி மற்றும் காட்டு பன்றியையும் வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கோபிநாத்தின் மீது வழக்கு பதிந்து மான் வேட்டையில் ஈடுபட்டது அவர் மட்டும்தானா அல்லது வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.