Perambalur: Farmers stage protest demanding Chief Minister waive crop loans as promised!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு, இன்று காலை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்த்தினர். நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் வழியாக முதலமைச்சருக்கு கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்பப் பெற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும்,
மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தேசிய புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள விவசாய குடும்பங்களின் மாதாந்திர சராசரி வருமானம் ரூபாய் 11,924. ஆனால், தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சராசரியாக 90%-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு லட்சத்திற்கு மேல் பயிர் கடன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசின் புள்ளி விவரத்தின்படி 92% விவசாயிகள் விவசாயிகளாக உள்ள சூழ்நிலையில், தாங்கள் அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன்கள் தள்ளுபடி திட்டத்தில் 90% சிறு குறு விவசாயிகள் ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
150-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் மத்திய அரசு 21 உணவுப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது. அதிலும் கரும்பு, நெல், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட மூன்று உணவு பொருட்களுக்கு மட்டுமே ஓரளவு கொள்முதல் உள்ளது. எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் 98% உணவுப் பொருட்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காமல் ஒவ்வொரு முறையும் கடன் சுமையையே எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் சராசரியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தை விற்று கடனை திருப்பி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் கடனைத் திருப்பி செலுத்த முடியாததால் பல கோடிக்கணக்கான ரூபாய் அபராத வட்டி தொகையுடன் நிலுவையில் இருந்து வருகிறது, தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 01-05-2025 முதல் 28-02-2026 வரை என்கிற காலக்கெடு மிகுந்த பாரபட்சமானதாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நஷ்டம் அடைந்ததால் கட்ட முடியாத விவசாயிகள் இந்த கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையாகவும், ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி மற்றும் தள்ளுபடி செய்யப்படும் கடன்களை 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் தற்போது காரணமாக காட்டப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வேளாண்மை துறைக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்குகிறது, அதில் ரூபாய் 30,000 கோடி 50 வகையான மானியத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த 50 வகையான மானிய திட்டங்களும் விவசாயிகளுக்கு 90% பயன் அளிக்காத, நிறுவனங்கள் பங்கு பெறக்கூடிய, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லாபம் ஈட்டக்கூடிய ஊழல் மானிய திட்டங்களே ஆகும்.
இந்த ஊழல் மானிய திட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் ஏற்படவில்லை, முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது சராசரியாக 15,000 கோடி ரூபாய் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால், தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒதுக்குகிற நிதியிலிருந்து கூடுதலாக ஒரு ரூபாய் கூட ஒதுக்காமலும், விவசாயிகளுக்கு ஒதுக்குகிற ரூபாய் 46,000 கோடியில் 15,000 கோடியை மட்டுமே எடுத்து, ஒருமுறை தாங்கள் முழுமையாக விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்து, தங்கள் வாக்குறுதியையும் நிறைவேற்றி, தங்களை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடுமாறும் அதில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தவெக அரசைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி மருதரசன், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ. அழகேசன், நகர செயலாளர் சரவணா பிரஸ் பாண்டியன், மாவட்ட போராட்ட குழு தலைவர் பாலகுரு, மாவட்ட போராட்ட குழு செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் செல்வ. சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சித்தார்த்தன், சத்திரமனை செல்லப்பன் செட்டிகுளம் ஜெயராஜ் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497