Perambalur local body Elections: 42 people on the first day of the nomination
பெரம்பலூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்குப் போட்டியிட 42 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் நேற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது குறித்த அறிவிப்புகளை வெளிளயிட்டார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17.10.2016 அன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர் – அரும்பாவூர் – பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும்.
19.10.2016 அன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் லப்பைகுடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில் இன்று (26.9.2016) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு ஒருவரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 3 நபர்களும் என மொத்தம் 4 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 38 நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
3.10.2016 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10மணி முதல் மாலை 5.00 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 3.10.2016 ஆகும்.
வேட்புமனுக்கள் பரிசீலனை 4.10.2016 அன்று நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 6.10.2016 ஆகும்.
முதற்கட்ட வாக்குப்பதிவு 17.10.2016 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 19.10.2016 அன்றும் நடைபெறும். 21.10.2016 அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 2.11.2016 மறைமுகத் தேர்தலுக்கான கூட்ட நாள் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்க்பட்டுள்ளது.