Perambalur: Petition submitted to the Collector seeking the recovery of 8,000 acres of Panchami land in the district!


பஞ்சமி நில மீட்பு பகுதி கூட்டமைப்பை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தடா.பெரியசாமி தலைமையில் கலெக்டர் ஷரண்யாவிடம் மனு கொடுத்தனர். அதன் விவரம்:

பஞ்சமி நிலங்கள் நிபந்தனை மீறப்பட்டு இதர இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டு அனுபவித்து வரப்படுவது சம்பந்தமாக நில நிர்வாக ஆணையர் கடிதங்கள் மூலம் தக்க வழிமுறைகளை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு, இதுவரை தக்க போதனைகள் வழங்கி ஆணை பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. பஞ்சமி நிலங்களை எந்த அதிகாரியும் நேரில் பார்வையிடவில்லை. மாமூலாக நடைபெறும் மேஜைத் தணிக்கை தான் (Table Aimaish) நடைபெற்று வருகின்றன. நிபந்தனைகள் மீறப்பட்டு இதர இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலங்களின் பேரில் திட்டங்களின் மேல் அடமானம் செய்யப்பெற்ற நிலங்களின் பதிவேடு பிரிவு-1 பாரா 1-இல் கூறியுள்ள படி கோட்டாச்சியர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தவிர மேற்படி கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு வட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலங்கள் ஆகியவற்றில் கிராமம், சர்வே எண், பரப்பளவு ஆகிய விவரங்கள் குறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் பட்டியல் பொது அறிவிப்பாக வைக்கப்படவில்லை.

நடந்து முடிந்த ஜமாபந்தியிலும் கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்த அதிகாரிகள் மேற்படி கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தணிக்கை செய்யவில்லை. ஆகவே தாங்கள் தயவு செய்து மேலே குறிப்பிட்டுள்ள நில நிர்வாக ஆணையரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தக்க நடவடிக்கை மேற்கொண்டு நிபந்தனை மீறப்பட்டு இதர இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும், மற்றுமுள்ள பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கவும் ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெரம்பலூர் மாவட்ட பஞ்சமி நில மீட்பு பகுதி ஒருங்கிணைப்பாளர் தடா. பெரியசாமி தெரிவித்தாவது:

இன்றைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு மனு கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க கொடுக்கிறாங்க. எல்லா மாவட்டத்திலேயும் அங்கங்கே கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இன்றைக்கு பெரம்பலூர் மாவட்டத்துல நாங்க கொடுத்திருக்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்துல மட்டும் 8,000 ஏக்கர் பஞ்சமி நிலம் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, அதுல வந்து நிறைய கண்டிஷன் மீறப்பட்டிருக்குனு அவங்களே சொல்லிருக்காங்க. கவர்மெண்ட்டே ஒத்துக்கிச்சு. கிட்டத்தட்ட ஒரு 4,000 ஏக்கர், 5,000 ஏக்கர் வந்து கண்டிஷன் மீறப்பட்டிருக்குனு சொல்றாங்க. அதை கலெக்டர்ட்ட சொல்லிருக்கோம். இந்த மாதிரி நீங்களே கொடுத்துருக்கீங்க, கண்டிஷன் மீறப்பட்டிருக்குனு சொல்றீங்க. கண்டிஷன் மீறப்பட்டதை உடனடியாக மீட்டு ஒப்படைக்கணும். இது வந்து சட்டத்துக்கு புறம்பா இருக்கு. கண்டிஷன் மீறப்பட்டுடுச்சினாலே சட்டத்துக்கு புறம்பானது. எனவே, உடனடியாக மீட்டு ஒப்படைக்கணும்னு கலெக்ட்டர்ட்ட சொல்லிருக்கோம். “சரிங்க, நான் பாக்குறேன்” அப்படின்னு சொல்லிட்டு மனு வாங்கிருக்காங்க.

12.5 லட்சம் ஏக்கர் மொத்த தமிழ்நாட்டுல இருக்கு. ஆனா அவங்க இன்னைக்கு கவர்மெண்ட் வந்து பரவலா நாங்க கலெக்ட் பண்ணதுக்கு சொல்றது வந்து வெறும் 1,10,000 ஏக்கர் தான் இருக்குனு இப்ப சொல்றாங்க. ஆனா அது அவ்வளவும்… அதுலயும் அந்த 1,10,000 ஏக்கர்லயே 17,000 ஏக்கர் வந்து கண்டிஷன் மீறிருக்குனு கவர்மெண்ட்டே சொல்லுது. ஆனா இதுவரைக்கும் எந்த கவர்மெண்ட்டும், அதாவது திமுகவா இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியா இருந்தாலும் சரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கூட இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால இன்றைக்கு த.வெ.க. அரசாங்கம் வந்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கு. இது பட்டியல் சமூக மக்களுடைய பாதுகாப்பதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கும்னு நாங்க நம்புறோம். அந்த அடிப்படையில சிறப்புச் சட்டம் வேணும்னு இப்ப நாம வந்து அடுத்த வாரம் முதலமைச்சரை சந்திச்சு ஒரு மனு கொடுப்பதாக இருக்கோம்.

பஞ்சமி நிலங்கள், ஒன்னு வந்து இவங்கள்ட்டயே இருக்கு. அதாவது, பட்டியல் சமுதாய மக்களே வச்சிருக்காங்க, இரண்டாவது, டோட்டலா கண்டிஷன் மீறிவிட்டு யூடிஆர்க்கு பிற்பாடு நிறைய பட்டா மாறி… பட்டாவே மாத்திட்டாங்க. அதுதான் வயலேஷன் முக்கியமா. அதுக்கு அடுத்தது வந்து, இவங்க பேர்லயே நிலம் இருக்கும், அவங்க அனுபவிச்சுட்டு இருப்பாங்க. அதுமாதிரி ஒரு வகை இருக்கு. அதுக்கு அடுத்து, சில நேரங்கள்ல வந்து நிலங்களையே மறைச்சு தகவலும் சொல்லாம நிறைய ஏமாத்தியும் இருக்காங்க. இப்ப இது எல்லாமே நாங்க கண்டுபிடிச்சிருக்கோம் என அவர் தெரிவித்தார். அப்போது, வழக்கறிஞர்கள் காமராஜ், ஜேசுதாஸ்,பிரபாகரன், ராஜா, பிச்சைமுத்து, சதிஷ்குமார், தேவராஜன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!