Perambalur: Protest against the closure of a 50-year-old dairy farm; Milk producers block the road!

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் கடந்த சுமார் 50 ஆண்டு காலமாக பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் பால்பண்ணை இயங்கி வரும், இந்த பால் பண்ணையில் நாள்தோறும் சுமார் 500 லிட்டர் அளவிற்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் தினம்தோறும் பால் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் அதே ஊரில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் மற்றொரு பால் பண்ணை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பால் வளத்துறை அதிகாரிகள் 50 வருடமாக இயங்கிய பால் பண்ணையை மூடப்படுவதாகவும், மகளிர் சுய உதவி குழு மூலம் செயல்பட்டு வரும் பால் பண்ணையில் தான் பாலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த தம்பிரான்பட்டியை சேர்ந்த கிராம பால் உற்பத்தியாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்ட போது, அவர்கள் ஒருமையில் பேசியதுடன், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இன்று காலை பால் ஊற்றுவதற்காக உற்பத்தியாளர் வந்த போது பால் பண்ணை திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பெரம்பலூர் – செட்டிகுளம் சாலையில் தம்பிரான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பால் கேன்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தகவல் அறிந்த போலீஸ், வருவாய் மற்றும் பால் வளத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களது கோரிக்கை ஏற்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும், மேலும், கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினர். சாலை மறியலை கைவிட்டு பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.











kaalaimalar2@gmail.com |
9003770497