Perambalur: Regulations for Vinayagar Chaturthi Festival Organisers; Sub-Collector Gokul Notice!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகர் சிலைகளை நிறுவுதல், பூஜை மற்றும் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு விதிமுறைறகள் விளக்கும் கூட்டம் சப்-கலெக்டர் சு.கோகுல் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த அமைப்பும், சிலை நிறுவ உள்ள நிலம் பொது நிலமாக இருந்தால் அதற்கான தடையின்மைச் சான்று, உள்ளூர் நிர்வாகம் / நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெற வேண்டும்.
எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி உரிமம் அனுமதி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடமிருந்து தற்காலிக கட்டமைப்புகள் தீப்பற்றுதல் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படும் சான்றிதழ், தமிழ்நாடு மின்சார வாரியமிடமிருந்து மின்சார ஆதாரம் பெறப்பட்டிருப்பதை உறுதி செய்யும் கடிதம்,
மேலும், நிறுவப்பட உள்ள சிலைகள் தூய மண்ணால் (களி மண்ணால்) செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலைகள் வர்ணம் பூச வேண்டுமானால் நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சு இல்லாத இயற்கை வர்ணங்களை, மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த வேண்டும்.
பந்தல்கள் அல்லது கட்டமைப்புகளுக்குள் உள்ளே சென்றுவர போதிய அகலம் கொண்ட நுழைவாயில்கள் இருப்பதோடு, முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்யதோடு, மின் ஒலிபெருக்கி பூஜை நேரத்தில் காலை, மாலை 2 மணி நேரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சிலை நிறுவும் இடங்கள் முறையாக ஒளியூட்டப்பட்டிருக்க வேண்டும். மின்சாரக் குறைபாடுகள் ஏற்பட்டால் ஜெனரேட்டர் வைத்துக் கொள்ளலாம்.
சிலைபாதுகாப்பிற்காக இரவு, பகல் 2 தன்னார்வலர்களை நியமிப்பதோடு, பொது இடங்களில் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து அனுமதிக்கப்பட்ட நாட்களுக்குள் கரைத்திட எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்குள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவல்துறை ஒப்புதல் அளித்த வழித்தடங்களில் மட்டுமே சீரிய முறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் வாகனத்தில் பயணிப்போர்கள் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டம் 1988 படி பின்பற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் மூழ்கடிக்கப்பட அல்லது கரைக்கப்பட வேண்டும். வழிபாட்டுப் பொருட்களான மலர்கள் உடைகள் அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை சிலைகளை மூழ்கடிக்கும் / கரைப்பதற்கு முன் அகற்றப்பட வேண்டும்.
பொது அமைதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ள பிற விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், என தெரிவித்தார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காவல், தீயணைப்பு, , வருவாய் துறையினர், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், சிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.