Perambalur: The Talent Center of Excellence was inaugurated by Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 23 மாவட்டங்களில் “திறனகம்” – சிறப்பு மாவட்ட திறன் மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் ந.மிருணாளினி பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் 2024-2025 சட்டப்பேரவை அறிவிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

திறனகம் என்பது ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படும். இம்மையங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அலுவலர்களால் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகின்றன. மாவட்ட தலைமையகங்களில் கணினி வசதி, குளிர்சாதன வசதி, உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, நான் முதல்வன், வெற்றிநிச்சயம் திட்டத்தின் கீழ் படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் படிப்பை தொடர முடியாமல் இடையில் நிறுத்திய இளைஞர்களுக்கும் முற்றிலும் இலவசமாக திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திறன் பயிற்சியில் சேர 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடைய ஆண், பெண் இருபாலரும் தகுதியுடையவர்கள். தனியார் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் வாயிலாக முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் குறுகியகால திறன் பயிற்சிகளாக 10 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி காலத்தில் ரூ.6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது, எனவே விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் மற்றும் படிப்பினை தொடர முடியாமல் இடையில் நிறுத்திய இளைஞர்கள் tnskill என்ற வெற்றி நிச்சயம் திட்டத்திற்கான இணையதளத்தில் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வெற்றி நிச்சயம் செயலி வாயிலாக விருப்பமான திறன் பயிற்சியை தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இலவச பயிற்சிகளில் சேர விரும்பும் இளைஞர்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதல் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி மையத்தை (திறனகம்) நேரில் அணுகி பயன்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வெற்றி நிட்சயம், சிகரம் அறக்கட்டளை சார்பில், இளநிலை மென்பொருள் உருவாக்குநர் பயிற்சி முடித்த 10 நபர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, இந்திய இரயில்வே துறை போட்டித்தேர்விற்கு தயாராகும் வகையில் 10 நபர்களுக்கு வினா வங்கி தொகுப்புகளை கலெக்டர் வழங்கினார்.

அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகராட்சித் துணைத்தலைவர் ஆதவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, மாவட்ட திறன் அலுவலர் சுஜாதேவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!