Projects allocated for a specific financial year must be completed within that same year to ensure the public benefits; remarks by the MPs of the Perambalur and Chidambaram constituencies.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (திஷா) கண்காணிப்புக் குழுவின் தலைவரும், பெரம்பலூர் எம்.பியுமாக கே.என்.அருண் நேரு, குழுவின் இணைத் தலைவர், சிதம்பரம் எம்.பியுமான தொல்.திருமாவளவன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் ப.அப்துல் ராசிக் முன்னிலையில் நடந்தது.

இதில் விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்), பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், மத்திய நிதிக் குழு மானியம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், பி.எம்.கிசான் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டத்தின் மூலம் என்னென்ன பணிகள் செயல் படுத்தப்பட்டுள்ளது, எத்தனை பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறித்தும், பெரம்பலூர், சிதம்பரம் தொகுதி எம்.பி-க்கள் ஆய்வு செய்தனர். மேலும்,
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை துறை,நெடுஞ்சாலை துறை, பள்ளிக்கல்வித்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறையாக பயன் படுத்தப்பட்டுள்ளதா, பயன் பெற்ற பயனாளிகளின் விபரங்கள், எவ்வாறு பயனாளிகள் தேர்வு செய்யப் படுகிறார்கள் என்பது குறித்தும், ஒவ்வொரு திட்டத்திற்குமான இலக்கீடுகள் முழுமையாக எய்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் எம்.பிக்கள் தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை அலுவலர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் மற்றும் தேவைகள் அனுமதி இருப்பின் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் விரைந்து மேற்கொண்டு தீர்வு காண முடியும். பொது மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் மேலும் தேவைப்படுகிறது என்பதனை எங்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அதை நாங்கள் பெற்றுத்தர பாராளுமன்றத்தில் தெரிவித்து பெற ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒதுக்கப்படும் பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் அந்த நிதியாண்டிற்குள் முடித்து பொதுமக்கள் பயனடைய செய்ய வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களிலும் தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசு திட்டங்களை முறையாக அரசு அலுவலர்கள் மக்களோடு மக்களாக ஒன்றிணைத்து அரசின் திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என பேசினர். போலீஸ் எஸ்.பி லலித்குமார், பெரம்பலூர் எம்.எல்.ஏ மற்றும் அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!