Seawater Convert Drinking Water project Scams: Stop it! K.Balakrishnan report
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள நெமிலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கான ஒப்பந்ததாரர்களை முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட AECOM கன்சல்டன்ட் நிறுவனம், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 5 விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள் என்று கூறிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் மீண்டும் டெண்டர் கோரும் முறையை துவக்குவதே நடப்பில் இருக்கும் முறையாகும்.
இதற்கு மாறாக கன்சல்டன்டின் ஆட்சேபணைகளையும் மீறி சூயஸ் நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக, அதோடு சேர்ந்து ஏற்கனவே சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள கோப்ரா என்கிற நிறுவனமும் இணைக்கப்பட்டு இந்த இரண்டு நிறுவனங்களில் கோப்ராவின் கேட்புத் தொகை குறைவாக இருந்தாலும் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ளதால் அதை நிராகரித்து சூயஸ் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தத்தை கொடுப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது வெளிவந்திருக்கிறது.
14 கோடி ரூபாய் கொடுத்து நியமிக்கப்பட்ட கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஆலோசனைகளை புறக்கணித்தது, இரண்டு ஆண்டுகள் வரை ஒப்பந்த புள்ளிகளை திறக்காமல் வைத்திருந்தது, கோப்ரா நிறுவனம் சிபிஐ விசாரணையில் இருப்பது தெரிந்த பிறகும் அதை மறைத்து டெண்டர் போட வைத்து பின்னர் இறுதிகட்டத்தில் அதை நிராகரித்தது, இவையனைத்தும் சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் உள்நோக்கத்துடன், மக்களின் நலன்களுக்கு அப்பாற்பட்ட நோக்கத்திற்காக வழங்கப்படுவதற்கு முறைகேடுகள் செய்யப்பட்டதாகும்.
எனவே, உடனடியாக தற்போது உத்தேசித்துள்ள டெண்டரை இறுதிப்படுத்தும் நடைமுறையை கைவிடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மறுடெண்டர் கோருவதற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது, என தெரிவித்துள்ளார்.