Tamil Nadu Chief Minister Jayalalithaa passed rumour: in Perambalur sensation, shops shutters
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானதாக மாலையில் செய்திகள் வந்ததால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா காலமானதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டதும் அதிமுகவினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ள மக்கள் கதறி அழுதனர். இந்நிலையில் இச்செய்தி பரவிய உடன் பெரம்பலூரில் பரபரப்பு உண்டானது உடனே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்தவர்கள், மற்றும் வேறு வேலைகளுக்கு சென்றவர்கள் அவசரம் அவரசமாக வீடு திரும்பினர்.
மேலும், பெட்ரோல் பல்க்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் பெட்ரோல் கிடைக்காமல் திண்டாடினர். மேலும் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளியூர் செல்ல வேண்டியவர்கள் தங்களுக்கான பேருந்துகள் வந்தவுடன் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள் மேலும் கிட்டத்திட்ட இரண்டு மடங்கு கூட்டம் பேருந்துகளில் இருந்தது.மேலும் ஒரு கட்டத்தில் பேருந்துகளே இல்லாமல் மக்கள் திணறினர்.
போலீசார் அரசு பேருந்து நிர்வாகிகளிடம் பேசி உண்மை நிலவரத்தை எடுத்து கூறினர். இதனால் தடைபட்டிருந்த பேருந்து போக்குவரத்து மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
பெரம்பலூரில், செல்போன் டவர்களும் கிடைக்கவில்லை. 4 அல்லது 5 தடவை முயற்சி செய்த பிறகே கிடைத்தது. மொத்தத்தில் இச்செய்தியால் பெரம்பலூர் மாவட்டமே அவதியுற்றது.