The reduction in the price of the bike in the showroom today to reserve the last hot spot customers .. !!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பைக்குகளில் விலைகள் குறைந்ததால் ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் இரவு பகலாக அலைமோதுகிறது.

புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள். ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தது.

இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவித்தது. மார்ச் 31 அதாவது இன்று இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

தள்ளுபடி குறித்த தகவல் அறிந்ததும் நேற்று மாலை முதலே வாடிக்கையாளர்கள் ஷோரூம்களை முற்றுகையிட தொடங்கினர். சுற்றுச்சூழலுக்கு கேடு என்றபோதிலும், விலை குறைவாக இருப்பதால் பைக், ஸ்கூட்டரை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஆர்வம்தான் அவர்களிடம் இருந்தது. அதேநேரம், வழக்கமாக பைக்குகளுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய சில நாட்கள் பிடிக்கும். ஆனால் இன்றுக்குள் பதிவு செய்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்பதால் வாடிக்கையாளர்களிடம் பதற்றம் உள்ளது.

இதுகுறித்து நேற்று இரவு, ஸ்கூட்டர் வாங்கிய சென்னை வாடிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், மார்ச் 31ம் தேதி மாலைக்குள் உங்கள் வாகனத்தை ரிஜிஸ்டர் செய்து தர வேண்டியது எங்களது பொறுப்பு என ஷோரூமில் கூறினர். எனவேதான் நம்பி வாங்கியுள்ளோம் என்றார். ஆனால் இது மிகப்பெரிய கஷ்டமான வேலை. நாளை முதல் பி.எஸ்.3 வகை வாகனங்களை ரிஜிஸ்டர் செய்ய முடியாது என்ற சூழலில் வாகனங்கள் வாங்கியோர் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!