மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் மாவட்ட ஆட்சிப் பணியாளரை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் 21.10.2016 தேதி முதல் 23.10.2016 தேதி வரை 30வது மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக கலந்து கொண்டு 14-வயதுக்குட்பட்ட பிரிவில்; ஆர்.சங்கீதா நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், 16-வயதுக்குட்பட்ட பிரிவில் ஆர்.கிருத்திகா 2000மீ ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கமும், கே.பவானி 400மீ ஓட்டப்போட்டியில் வெண்கலபதக்கமும், எம்.சுபாஷினி 3 கி.மீ நடைபயிற்சி போட்டியில் வெண்கல பதக்கமும், 18-வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெ.மிஸ்பா அனிதா “ஹெப்டாத்லன்” எனப்படும் போட்டியில் தங்கப் பதக்கமும், என்.நாகப்பிரியா மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் (25.10.2016) மாவட்ட ஆட்சிப் பணியாளரை நேரில் சந்தித்தனர். அப்போது விளையாட்டுத் துறையில் மென்மேலும் பல சாதனைகள் படைத்து நமது பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று வீராங்கனைகளை மாவட்ட ஆட்சிப் பணியாளர் பாராட்டினார். இந்நிகழ்வின்போது தடகளப் பயிற்றுநர் க.கோகிலா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா ஆகியோர் உடனிருந்தனர்.