பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2015-2016 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையில் 2016 ஜீலை மூன்றாவது வாரத்தில் தொகுதி IV -இல் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4,931 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ – மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக நடத்தப்படும் தொகுதி IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் ந.முரளிதரன் துவக்கி வைத்தார். இதுவரை இந்தப் பயிற்சி வகுப்பில் 140க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ள அரங்கமானது 120 நபர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி, ஒலி- ஒளி அமைப்பு, படவீழ்த்தி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட வசதிகளுடன் பயிற்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கால போட்டித்தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களுடன் கூடிய நூலக வசதியும் செய்யப்படுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி, வட்டாட்சியர் சீனிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரகள் பெ.மணிவேல், சண்முகம், ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.