பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் மகன் ரியாஸ் (வயது 12). இவன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மகன் அப்ரோஸ்கான்(11). இவன் அயன்பேரையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ரியாசுக்கும், அப்ரோஸ்கானுக்கும் தற்போது கோடை விடுமுறை என்பதால் குளிப்பதற்காக ஊருக்கு அருகாமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளனர்.
மாலை நீண்ட நேரமாகியும் ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கான் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடி சென்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிணற்றின் மேல் பகுதியில் ரியாஸ், அப்ரோஸ்கான் பயன்படுத்திய உடைகள் கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மங்களமேடு போலீசாருக்கும், பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து தண்ணீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியற்றி உடல்களை மீட்டனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.