உலகக்கோப்பை தொடரில் தொடக்க போட்டியில் ரஷ்யா தான் வெற்றி பெறும் என அசிலிஷ் பூனை கணித்துள்ளது.உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. போட்டிகளை நேரில் கண்டுரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது போல், போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என கணிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. 2010 உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. இந்த முறை போட்டியை நடத்தும் ரஷ்யா, போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையத்து முதல் போட்டியில் விளையாடும் ரஷ்யா-சவுதி அரேபிய அணிகள் கொடிகள் வைக்கப்பட்டன. அசிலிஷ் எதை குறிக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்ததில் தொடக்க போட்டியில் ரஷ்யா கொடியருகே வைக்கப்பட்ட உணவை உண்டு ரஷ்யா வெற்றி பெறும் என கணித்தது. அசிலிஷ்-ன் இந்த கணிப்பு பலிக்குமா என ரஷ்ய ரசிகர்கள் மட்டுமல்லாது அதிகாரிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதியாக, அசிலிஷ்-க்கு ரஷ்யாவின் ஆடை அணிவிக்கப்பட்டது.